தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 5 மணி முதல் நேற்று காலை 10 மணி வரை 29 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. மதியம் சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. முதல் நாள் சாரல் மழை பெய்து வந்த நிலையில், இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக சிற்றார், அனுமன் நதி, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
செங்கோட்டைக்கு மேற்கே உள்ள தஞ்சாவூர் குளம் உடைந்து, கொல்லம் – திருமங்கலம் சாலையில் ஆறு போல் தண்ணீர் ஓடியது. இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை தீயணைப்பு துறையினர், பணியாளர்கள் மற்றும் போலீசார் மீட்டனர். தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் இந்த பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

விஸ்வநாதபுரம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதேபோல், செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு பகுதியில் உள்ள நீலியம்மன் கால்வாயில் இருந்து பெருக்கெடுத்த தண்ணீர், கொல்லம்-திருமங்கலம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. செங்கோட்டைக்கு மேற்கே உள்ள பூலாங்குடியிருப்பு உள்ளிட்ட சில கிராமங்களுக்கு செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தஞ்சாவூர் குளம் உடைந்து வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
இதேபோல் காசிமேஜர்புரம், கட்டாளக்குடியிருப்பு உள்ளிட்ட பல வயல்களிலும் பயிர்கள் நீரில் மூழ்கின. குற்றாலம் பிரதான அருவியில் இருந்து வெளியேறிய வெள்ளம் அருவிக்கரை அருகே உள்ள பிரசித்தி பெற்ற குற்றாலநாத சுவாமி கோயிலுக்குள் புகுந்தது. கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கினாலும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரதான அருவியில் இருந்து வெளியேறிய வெள்ளம் சன்னதி பஜாரில் பெருக்கெடுத்து ஓடியது. பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் உள்ள கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதேபோல் தென்காசி ஓடையில் இருந்து வெள்ளம் தட்சிணாமூர்த்தி கோயிலுக்குள் புகுந்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் சுவாமி கோயிலிலும் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.