கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்த கார் விபத்து தொடர்பாக, மதுரை ஆதினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலீசார் வழங்கிய தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் அது ஒரு தலை பட்சமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து சம்பவத்தில் மதுரை ஆதினம் பயணித்த கார் சிக்கியது. ஆனால் அவர் எவ்வித காயமும் இன்றி தப்பினார். பின்னர் பேட்டியளித்த அவர், “இந்த விபத்து சாதாரண விபத்தல்ல; என்னை கொல்ல ஒரு சதி நடந்திருக்கலாம்” என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த போலீசார், “விபத்து சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஆதினத்தை கொல்ல சதி நடப்பதாக கூறுவது பொய்யானது” என கூறினர்.
மே 5 ஆம் தேதி மதுரை ஆதினம் வெளியிட்ட புதிய அறிக்கையில், “எதிர்த்தரப்பில் இருந்த வாகனம் பதிவு எண் இல்லாமல், தடுப்புகளை மீறி மோதியது பற்றி போலீசார் எந்த தகவலும் குறிப்பிடவில்லை. இது வருத்தமளிக்கிறது. போலீசாரின் விளக்க அறிக்கை பக்கச்சார்பாகவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும் இருக்கிறது” என தெரிவித்தார்.

மேலும், அவசர உதவி எண் 100க்கு அவர்கள் முதலில் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் போலீசார் “மதுரை ஆதினம் சார்பாக எந்த புகாரும் பெறப்படவில்லை” என்று கூறியிருப்பது முற்றிலும் பொய்யானதாகவும் கூறியுள்ளார்.
விபத்து ஏற்பட்ட சாலையில் தடுப்புகள் இல்லாத நிலையிலும், மற்ற வாகனம் வேகமாக வந்ததாகவும், சம்பவ இடத்தில் அந்த வாகனத்தில் இருந்தவர்கள் இருவரும் இஸ்லாமியர்களாக இருந்ததாகவும், அந்த வாகனத்திற்கு பதிவு எண் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சம்பவம் நடந்த 26 மணி நேரத்திற்கு பிறகும் போலீசார் எந்தவித தகவலும் தராதது சந்தேகத்துக்கிடமானதாகவும் அவர் குறிப்பிட்டார்.