தஞ்சாவூர்: சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை முன்னிட்டு தஞ்சையில் பூக்களின் விலை உச்சம்தொட்டது. மல்லிகை கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், பூக்காரதெரு ஆகிய இடங்களில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கள், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் ப்ல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும்.
அதேப்போல் இங்கிருந்தும் பல்வேறு இடங்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.
பொதுவாக பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களில் விலை உயர்ந்து காணப்படும். மேலும் வரத்து குறைவாக இருந்தாலும் விலை உயரும்.
இந்த நிலையில் இன்று சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, அதற்கு மறுநாள் விஜயதசமி என தொடர்ந்து பண்டிகை வருவதால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாகவே பூச்சந்தைகளில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. வரத்து அதிகமாக இருந்தாலும் தேவை அதை விட அதிகம் என்பதால் அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மல்லிகை கிலோ ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது
ஆனால் நேற்று கிலோ ரூ.1000 வரை விற்பனையாகின. இதேப்போல் கிலோ ரூ.600-க்கு விற்பனையான முல்லை கிலோ ரூ.1000-க்கும். கனகாம்பரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டன.
செவ்வந்தி கிலோ ரூ.300, அரளி ரூ.600, ரோஸ் ரூ.300, செண்டிப்பூ ரூ.150-க்கும் விற்பனையாகின. இவற்றின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.