சென்னை: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் புதிய கட்டிடம், ஒன்பது மாதங்களுக்குள் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிர்ஷ்டவசமாக விடுமுறை நாட்களில் இந்த விபத்து நடந்ததால் குழந்தைகள் உயிர் தப்பினர். ஆனால் பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொந்த மாவட்டத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அதிமுக ஐடி விங், “மாணவர்களின் அடிப்படை தேவையான பள்ளிக் கட்டுமானத்திலும் திமுக அரசு கொள்ளைக்காக கையொப்பமிடுகிறது. இது வெட்கக்கேட்டின் உச்சம்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைவும் அறிக்கை வெளியிட்டு, “திமுக ஆட்சிக்கு வந்த பின் அரசுப் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஊழல் காரணமாக குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” என குற்றம்சாட்டினார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டிருக்கும் நிலையில், அடிக்கடி நிகழும் இத்தகைய விபத்துகள் அரசுப் பள்ளிகளின் நம்பகத்தன்மையை மேலும் சீர்குலைக்கும் அபாயம் உள்ளதாகவும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.