அவிநாசி : திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த பழங்கரையில், ‘வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பின், 11-வது ஆண்டு துவக்க விழா, நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை, ‘சுற்றுச்சூழல் மாற்றத்தில் தொழில்முனைவோரின் பங்கு’ என்ற தலைப்பில் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி தமிழகத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்குகிறோம்.
மே மாதத்திற்குள் 1 கோடி கையெழுத்துகளை சேகரித்து ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க உள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக மக்களை குழப்ப வேண்டாம். விகிதாசார அடிப்படையில் தொகுதிகள் அதிகரிக்கப்படும். எனவே, அனைத்துக் கட்சி கூட்டம் தேவையற்றது. பிரச்சினைகளை திசை திருப்பும் முயற்சியே இந்த சந்திப்பு. முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அனைவரும் பாஜகவை விமர்சித்து வருகின்றனர். அமைச்சர் கீதாஜீவன் அரசியல் நாகரீகம் பற்றி பேசும் இவ்வேளையில், குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
சீமான் வீட்டில் சம்மனை கிழித்த விவகாரம் காவல் துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. வீட்டில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பியிருக்கலாம். தேடப்படும் குற்றவாளி வீட்டிலேயே ஒட்டப்படும். காவல் துறை நடந்து கொண்ட விதம் ஏற்கத்தக்கது அல்ல. மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் திருமாவளவன் ஏன் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார்? மயிலாடுதுறையில் மூன்றரை வயது குழந்தை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் கூறிய கருத்து ஏற்கத்தக்கது அல்ல.
அவரது உடனடி இடமாற்றம் வரவேற்கத்தக்கது. திமுகவினர் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர். நான் பஞ்சாயத்து தலைவர்களை மதிக்கிறேன், ஆனால் உதயநிதி ஸ்டாலினை தலைவராக மதிக்கவில்லை. திருப்பூரில் பல பள்ளிகள் அருகே கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஆளுநரை சந்திக்க உள்ளோம். வேங்கைவாயல் போல இந்தப் பிரச்னையைக் கையாளக் கூடாது. இதற்கு சிபிஐ விசாரணைதான் தீர்வு. இவ்வாறு அவர் கூறினார்.