சென்னை: சென்னை மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மடம் உள்ளது. இந்த மடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் ராமகிருஷ்ண சர்வ சமய கோயில் கட்டப்பட்டது. இந்நிலையில், இக்கோயில் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதால், ராமகிருஷ்ண மடம் சார்பில் மார்ச் 23-ம் தேதி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மார்ச் 17-ல் ஸ்ரீருத்ர பாராயணம், 18-ல் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம், 19-ல் பள்ளி மாணவர்களால் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், பஜனை, 20-ல் அகண்ட நாமஜபம், 21-ல் தேவாரம், திருவாசகம், 21-ல் பக்தர்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, மார்ச் 22-ம் தேதி ராமகிருஷ்ண மடத்தின் தர்ம மருத்துவமனை நூற்றாண்டு விழா நடக்கிறது.

அன்று பொதுக்கூட்டம், புதுப்பிக்கப்பட்ட பல் மருத்துவ பிரிவு மற்றும் மருந்தகம் திறப்பு விழா, நினைவு மலர்கள் வெளியீடு, துறவிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. ராமகிருஷ்ண சர்வ சமய கோவிலின் வெள்ளி விழாவின் முக்கிய நாளான மார்ச் 23-ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் ஸ்ரீசண்டி ஹோமம், 11.45 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு திருச்சூர் சகோதரர்களின் இன்னிசை கச்சேரி, இரவு 7 மணிக்கு ஸ்ரீமத் ஸ்வாமி கவுதமானந்தா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது.