கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால், அதன் வெள்ளி விழாவை தமிழக அரசு கொண்டாடவுள்ளது. இதற்காக கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் வரும் 31-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தேதி நடக்கிறது. இதில், திருக்குறளின் மகத்துவத்தை குறும்படங்கள், ரீல்கள், ஏஐ, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் உணர்த்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கு சமூக வலைதளங்களில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்ட நூலகங்கள், அரசு அலுவலகங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இதையொட்டி, ‘வள்ளுவம் போற்றுவோம் – வெள்ளி விழா 25’ என்ற லோகோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “சமத்துவத்தை போற்றும் உலகப் பொது மதத்தை உருவாக்கிய அய்யன் வள்ளுவருக்கு நம் நாடு தொடங்கும் குமரி எல்லையில் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. மூப்பிலா தமிழில் முப்பால் உருவாக்கிய அய்யன் திருவள்ளுவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த சிலையை “பேரறிவு சிலை” என்று கொண்டாடுவோம்.
இதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருக்குறள் வழங்கிய அய்யன் வள்ளுவருக்கு 133 அடி உயர சிலையை குமரி முனையில் நிறுவி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த சிறப்பு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் வள்ளுவர் சிலைக்கு பேரறிவு சிலை என்று பெயரிட்டுள்ளார். “சமூக நீதி அரசின் அடையாளமாக பேரறிவு சிலை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தலை நிமிர்ந்து நிற்கட்டும். வள்ளுவரின் புகழ் வாழ்க” என்று கூறினார்.