திருவண்ணாமலை: திருவூடல் நிகழ்ச்சியில் மண்டக படியின்போது பக்தர் ஒருவர் அம்மனுக்கு ரேஷனில் வழங்கப்படும் விலையில்லா சேலையை சாத்தியதாக திருவண்ணாமலை கோவில் ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பவுர்ணமியின்போது கோவிலில் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள அம்மன் சிலைக்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் விலையில்லா சேலை அணிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுகுறித்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதியிடம் கேட்டபோது, திருவூடல் நிகழ்ச்சியில் மண்டக படியின்போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலையை சாத்தினர். இதில் பக்தர் ஒருவர் ரேஷன் சேலையை வழங்கி உள்ளார். பவுர்ணமியின் போது அம்மன் சிலைக்கு அந்த ரேஷன் கடை சேலை அணிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அறிந்ததும் உடனடியாக சேலை மாற்றப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.