சென்னை: சமீபத்தில் நடைபெற்ற கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் மோடியுடன், விசிக தலைவர் திருமாவளவனும் ஒரே மேடையில் இருந்தது அரசியல் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட கருத்துக்கு, விசிகவின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கடுமையாக பதிலளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, பிரகதீஸ்வரர் கோயிலின் ஆயிரம் ஆண்டு நிகழ்வு, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அவர் படையெடுத்த 1000-ஆம் ஆண்டு விழா ஆகிய மூன்று விழாக்கள் ஒருங்கிணைந்தபடி நடைபெற்றன. இதில் பிரதமர் மோடியும், விசிக தலைவர் திருமாவளவனும் ஒரே மேடையில் தோன்றியது தான் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “திருமாவளவனின் பங்கேற்பு ஒரு அற்புதமான திருப்புமுனை” என்றும், இது பிரதமர் மோடி மற்றும் தமிழகத்தின் மீது வைத்துள்ள மரியாதையை காட்டுகிறது என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த வன்னி அரசு, “இதில் எந்த அரசியலும் இல்லை. இது மாவட்டத்தில் நடந்த அரசு விழா. அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக திருமாவளவன் பங்கேற்றார். நாகரீக அரசியலில் இது இயல்பு. ஆனால், அதை திருப்புமுனை எனச் சொல்வது அதிமுகவின் குழப்பத்தை காட்டுகிறது,” என விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், “எந்த மேடையிலும் சிறுத்தை சிறுத்தையாகவே காணப்படும். பாஜகவுடனோ, சனாதனத்துடனோ எங்களுக்குத் தொடர்பில்லை. திருமாவளவனின் நிலை தெளிவாகவே உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி 2026 தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்படும்,” என்றும் வலியுறுத்தினார்.