சென்னை: அழகான வெளித்தோற்றத்தை முகத்தில் புன்னகை மூலம் காட்டுவதிலும் பற்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. பற்கள் வெள்ளையாக இருப்பது என்பது அழகின் ஒரு பகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
பல் முளைக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கின்ற பற்கள். வயது ஆக ஆக அந்தப் பொலிவு குறைந்து கொஞ்சம் மஞ்சள் நிறத்துக்கு மாறும். எனாமல் எனும் வெளிப்பூச்சு தேய்ந்து ‘ஹடென்டின்’ எனும் உள்பகுதி வெளியில் தெரியத் தொடங்குவதே முதுமையில் ஏற்படுகிற பல்லின் நிறமாற்றத்துக்கு அடிப்படைக் காரணம்.
ஆனால், பலருக்கும் இளமையிலேயே பற்களின் நிறம் மாறிவிடுகின்றது. பற்களின் மஞ்சள் கறையை நீக்குவது பற்றி இப்பதிவில் காணலாம். எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களின் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இப்பழங்களின் தோல்களில் டி-லிமோனென் என்னும் சேர்மம் நிறைந்திருக்கிறது.
வைட்டமின் சி, டி-லிமோனென் ஆகிய இரண்டும் பற்களை வெண்மையாக்கும் பண்பு கொண்டவை. எனவே தினமும் இத்தோல்களை கொண்டு பல் துலக்கி வந்தால் பல்லின் மஞ்சள் கறை நீங்கும். தினமும் காலையிலும் மற்றும் இரவில் தூங்கச் செல்லும் முன்பும் பல் துலக்க வேண்டும். பற்களில் கறை படியாமல் இருப்பதற்கு அது உதவியாக இருக்கும்.
உப்புடன் எலுமிச்சைச் சாறு சிறிதளவு கலந்து தினமும் பல் துலக்கி பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி பற்கள் பிரகாசமாகத் தெரியும்.