சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன், ‘இந்து தமிழ் திசை‘ நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் தென் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக நாமக்கல், மதுரை மாவட்டம் சிட்டம்பட்டியில் 11 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மதுரை மாவட்டம் இடையப்பட்டி, உசிலம்பட்டியில் 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான், குப்பணம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வங்கக் கடலில், கரையில் வலுப்பெற்றுள்ள டானா புயல், முழுமையாக வலுவிழக்காமல், நிலப்பரப்பில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது. இதன் காரணமாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுகிறது.
எனவே, தமிழகத்தில் இன்று முதல் நவ., 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை. அதன் பிறகு மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 30-ம் தேதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அக்., 31, நவ., 1-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழக கடலோர பகுதிகளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.