இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்ள எந்த தடையும் இல்லை. நாங்கள் அந்த அளவுக்கு சுதந்திரமாக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார். நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
கரூர் சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் உடனடியாக கரூர் சென்று அனைத்து வகையான பணிகளையும் விரைவுபடுத்தினார். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் முதல்வரின் கரூர் வருகையை வைத்து அரசியல் செய்கிறார். எங்கள் கூட்டணிக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை. கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்ள எந்த தடையும் இல்லை. நாங்கள் அந்த அளவுக்கு சுதந்திரமாக இருக்கிறோம். அந்த வகையில், கரூர் சம்பவம் குறித்து திருமாவளவன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கூட்டணியைத் தாண்டி, தேசம் மற்றும் தேச நலன்கள் குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். தவேக தலைவர் விஜய் எந்த கூட்டணியில் இருந்தாலும், அந்த கூட்டணியை நாங்கள் நிச்சயமாக தோற்கடிப்போம். மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி முறையை உருவாக்க முயற்சி நடக்கிறது.
ஆளுநர் பதவியை வகித்துக்கொண்டே முதலமைச்சரை புறக்கணிக்க முயற்சிப்பது ஜனநாயகத்தின் மீதான பயங்கரமான தாக்குதலாகும். இதற்கு எதிராக தமிழக அரசு ஒரு போரை நடத்தியுள்ளது. இந்த ஜனநாயகப் போரை தொடங்கிய முதல்வர் ஸ்டாலினுடன் நாங்கள் நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.