சென்னை: குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம் கூற முடியாது. குழந்தைகளை சரியாக கவனித்து வந்தால் மட்டுமே அவர்களது பிரச்னையை உடனடியாக அறிந்து மருத்துவரை நாட முடியும். அதிக சத்துள்ள உணவுப் பொருட்களைக் கொடுத்தும் குழந்தையின் உடல் தேறவில்லையே என தாய்மார்கள் கவலை கொள்வார்கள். குழந்தைகள் சாப்பிட்ட உணவு செரிக்காமல் குடலிலே சளியின் ஆதிக்கம் மிகுந்து கிருமிகளால் குடலில் உபாதை ஏற்படுத்தி குடல் வீங்கி காணப்படும்.
இந்த பாதிப்பு கொண்ட குழந்தைகளின் மலம் சளி போல் இறங்கும். இதற்கு பழங்கால மருத்துவ முறைகளில் மாந்தம் என்று சொல்வார்கள். மாந்தம் என்பது குடல் செரிக்கும் தன்மையை இழந்து வயிறு பொருமி இருப்பதுதான். இந்நிலையில் குழந்தையின் கல்லீரல் சிறிதளவு பாதிப்படையும். வயிற்றுப் புழுக்கள் வரக் காரணம், அசுத்த நீரில் விளையாடுவது, சுகாதாரமில்லாத தண்ணீரைக் குடிப்பது, அசுத்த நீரில் குளிப்பது போன்ற சுற்றுப் புறசூழ்நிலைகளாலும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் வர வாய்ப்புள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். மூக்கில் நீர் வடிந்து கொண்டிருக்கும். கை, கால் உணங்கி வயிறு பெருத்துக் காணப்படும். இளம் வயதில் ஏற்படும் இந்த வயிற்றுப் பொருமல் குழந்தை வளர வளர மற்றொரு நோயை உண்டாக்கும். புத்தி மந்தம், சரியாக சிந்திக்கும் தன்மையை இழத்தல், படிப்பில் போதிய கவனமின்மை, ஞாபகமின்மை போன்றவை உண்டாகும். குழந்தைகளின் ஞாபக திறனுக்கு கல்லீரலின் பங்கு அதிகம். ஞாபக சக்தியை தூண்டுவது பித்தம்தான். அத்தகைய பித்தத்தை சுரப்பது கல்லீரல்தான்.
கல்லீரலை பலப்படுத்தினாலே ஞாபக சக்தி அதிகரிக்கும். கல்லீரல் பாதித்தால் கண்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இதற்கு மருத்துவரை அணுகி கல்லீரல் பாதிப்பிற்கு மருந்து கொடுக்க வேண்டும். அதனோடு வயிற்றில் உள்ள சளியை மாற்றி உணவை செரிக்க வைக்கும் தன்மையை தூண்ட கூடிய மருந்துகளை கொடுக்க வேண்டும். மேலும் வயிற்று கிருமிக்கும் மருந்து கொடுத்து வந்தால் உண்ட உணவு நன்கு செரித்து குழந்தைகளுக்கு உண்டான வயிற்று பொருமல் மாறி ரத்தத்தில் சத்துக்கள் கலந்து உடல் நலம் தேறும்.
தாயின் அன்பும், அரவணைப்பும், குழந்தையின் சுகாதாரத்தை பேணிக்காப்பதில் விழிப்புணர்வுமே குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சியாகும்.