சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- பார்லிமென்ட் வரலாற்றில் கறை என சொல்லக்கூடிய வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். அநியாயத்தை அரங்கேற்றியுள்ளனர். வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்தது பாராட்டுக்குரியது. அடுத்த அமர்வில் இன்னும் என்ன செய்யப் போகிறார்கள், எந்தச் சட்டத்தைக் கொண்டுவரப் போகிறார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 26 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்புக்கு இதுவரை பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அமெரிக்க அதிபரின் நடவடிக்கை இந்திய வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். குஜராத் வன்முறையை வெளிப்படுத்தும் வகையில் எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது. கடுமையான தணிக்கைக்கு பிறகு வெளியான பிறகும் தயாரிப்பு நிறுவனம் மீது மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
திருமாவளவன் சமூக வலைதள பக்கத்தில், “புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனத்திற்கு பின், வி.சி.க.,வின் ஒன்றிய, நகர பொறுப்புகள் நியமிக்கப்படும். அதுவரை, பழைய பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும். தற்போதைய சூழலில், ஒன்றிய, நகரங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்கக் கூடாது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தாமு.இனியவன் நியமித்துள்ள பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்புடையதாக இல்லை. எனவே, அது செல்லாது. புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியான பிறகு அவரது பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும்” என்றார்.