மதுரை: திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி நடப்பதாக இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா, அதன் முன் உள்ள கொடி மரம், நெல்லி தோப்பு, தர்காவிற்கு செல்லும் படிகள் மற்றும் புதிய மண்டபம் தவிர, மற்ற அனைத்து பகுதிகளும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது. எனவே, ஆடு, கோழிகளை பலியிட்டு மலையை சிக்கந்தர் மலையாக மாற்றும் முயற்சியை தடை செய்ய வேண்டும் என்று அவர் கோரினார். இதேபோல், இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம், “பக்ரீத் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சொந்தமான பாதையை அடைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்ய தடை விதிக்க வேண்டும்” என்று மனு தாக்கல் செய்தார்.

இதேபோல், பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், வழக்கு 3-வது நீதிபதிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி, நீதிபதி விஜயகுமார் வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. சிக்கந்தர் தர்காவிற்கு செல்லும் வழியில் உள்ள நெல்லித்தோப்பில் முஸ்லிம்கள் வழிபடுவதற்கு எந்த தடையும் இல்லை. மலையை திருப்பரங்குன்றம் மலை என்று அழைக்க வேண்டும்” என்று கூறப்பட்டது.