திருவள்ளூர் மாவட்டத்தில், குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டு, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு போல எந்த பிரச்சனையும் ஏற்படாமல் சரியாக செயல்பட வேண்டும் என்ற நோக்குடன் சிஎம்டிஏ அதிகாரிகள் கவனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, தென்மாவட்ட மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு போலவே உருவாக்கப்படுவதாகவும், மேற்கு மாவட்டங்களுடன், கர்நாடகா, கேரளா செல்லும் மக்களுக்கும் முக்கிய வசதியாக அமையவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில் சுமார் 350 கோடி ரூபாயில் கட்டப்படுவதாகவும், இதற்காக 24.8 ஏக்கர் நிலம் மாநில வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய பேருந்து நிலையம், புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் மாநகர பேருந்துகளுக்கான அமைப்பில் 130 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கான வசதியை கொண்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், தற்போது மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த புதிய பஸ் ஸ்டாண்டுக்கு மாற்று சாலை வசதி இல்லாததால், போக்குவரத்து சிக்கல்கள் உருவாகி இருக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், 7 கிராமங்கள் வழியாக புதிய சாலை அமைக்க முயற்சி நடைபெறுவதாகவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரமைப்பு வல்லுனர்களின் கருத்து படி, சென்னையை பெங்களூருவுடன் இணைக்கும் சாலையின் அருகில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு தனித்தனி பாதைகள் இருக்க வேண்டும். ஆனால், குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அனைத்து வகை வாகனங்களுக்கும் ஒரே பாதை மட்டுமே இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு தீர்வாக, வெளிவட்ட சாலை மற்றும் புதிய லூப் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான நிலம், கோலப்பஞ்சேரி, துக்கானம்பட்டு, வரதராஜபுரம், காவல்சேரி உள்ளிட்ட கிராமங்களின் பகுதிகளில் இருந்து பெறப்படவுள்ளதாகவும், 1,605 ஏக்கர் நிலத்தை நில தொகுப்பு முறையில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலத்தை பயன்படுத்தி, 100 அடி அகலத்தில் லூப் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் போக்குவரத்து வசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மேலும், கிளாம்பாக்கம் போல எந்த பிரச்சனையும் குத்தம்பாக்கத்தில் ஏற்படக்கூடாது என்பதில் சிஎம்டிஏ அதிகாரிகள் கவனமாக இருக்கின்றனர்.