திருவொற்றியூர் தனியார் பள்ளியில் எரிவாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்தது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே திருவொற்றியூர் பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவொற்றியூர் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் இரண்டாவது முறையாக எரிவாயு கசிந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே பள்ளியில் எரிவாயு கசிவு ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில், தற்போது மீண்டும் அதே பள்ளியில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கு விஷவாயு தாக்கிய மாணவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதுடன், சம்பவத்திற்கான காரணங்களை தெளிவாக ஆராய்ந்து பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்த பின்னரே பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
மேலும், கடந்த முறை எரிவாயு கசிவு குறித்து தீயணைப்பு துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்த போது, இன்னும் விவரம் வெளிவராத சூழ்நிலையில், மீண்டும் பள்ளியை திறந்து மாணவர்களை பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.