ஏலகிரி: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ள ஏலகிரி, ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படுகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஏலகிரி, கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழலில் அமைந்துள்ளது. சுமார் 28 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட மலையில் 14 கிராமங்கள் உள்ளன. தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏலகிரியில் படகு சவாரி வசதியுடன் கூடிய பூங்கா உள்ளது.
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, தொலைநோக்கி கண்காணிப்பகம் மற்றும் சுவாமி மலை ஆகியவையும் இங்குதான் உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இந்த மலைக்கு வந்து தங்குகின்றனர். குறிப்பாக கோடை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது, பாராகிளைடிங் சாகச விளையாட்டு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஏலகிரியில் மே மாத இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோடை விழாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி வாரியம் நடத்துகிறது. அப்போது, பல்வேறு துறைகளின் அரங்குகள், மலர் கண்காட்சிகள், படகு இல்லத்தில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், நடனம், பாடல் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பல்வேறு வகையான நாய் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் மாநிலம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கோடை விழா நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு கோடை விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏலகிரியில் கோடை விழா நடைபெறுமா என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கோடை விழா நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.