பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலாளர் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் தொடர்பான யுஜிசியின் வரைவு அறிக்கை மீது கருத்துகள் தெரிவிக்க பிப்.28 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலாளர் மணீஷ் ஆர்.ஜெயின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதி குறித்த வரைவு அறிக்கை கடந்த மாதம் யுஜிசியால் வெளியிடப்பட்டது. அவற்றை https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கான கால அவகாசம், பிப்., 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, வரைவு அறிக்கை தொடர்பான கருத்துகள், ஆலோசனைகள், ஆட்சேபனைகளை தெரிவிக்க, பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.