சென்னை: கோயம்பேடு சந்தையில் நேற்று (சனிக்கிழமை) தக்காளி விலை கிலோ ரூ.44 ஆக குறைந்துள்ளது. இதுவே கடந்த வாரம் ரூ.70-க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் கடும் வெப்பமும், அதிகனமழையும் பெய்தது. இதன் காரணமாக, தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதன் தாக்கத்தால் தக்காளி விலையும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயர்ந்திருந்தது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார், பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை காய்கறி சந்தைகளில் தக்காளி கிலோ முதல் தரம் ரூ.100, 2-ம் தரம் ரூ.80, 3-ம் தரம் ரூ.70 என விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை ரூ.44 ஆக குறைந்துள்ளது. மற்ற காய்கறிகளான பீன்ஸ், அவரைக்காய் தலா ரூ.70, முருங்கைக்காய், சாம்பார் வெங்காயம் தலா ரூ.40, கேரட், பச்சை மிளகாய், நூக்கல் தலா ரூ.35, முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பீட்ரூட், பாகற்காய் தலா ரூ.30, கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.16, புடலங்காய் ரூ.15 என விற்கப்பட்டு வருகிறது.
தக்காளி விலை குறைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை தக்காளி வியாபாரிகளிடம் கேட்டபோது, “ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லையோர பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்று தக்காளி வாங்கினர். அதனால் விலை உயர்ந்திருந்தது. தற்போது சென்னை உள்ளிட்ட வட மாவட்ட வியாபாரிகளே சென்று வாங்கி வருவதால் விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.