பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா முதலமடா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி, ஆனைமலை, சேத்துமடை, டாப்சில்ப் வழியாக பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு வருகின்றனர்.
சொந்த வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகள் அணைப்பாடி வரை செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அங்கிருந்து பரம்பிக்குளம் அணைக்கட்டு பகுதிக்கு செல்ல வனத்துறை வாகனங்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வனத்துறை வாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வனத்துறை வாகனங்களில் சென்றால், துணக்கடவு அணை, கன்னிமாரா தேக்கு மரம், மூங்கில் படகு இல்லம், அருவிகள், சாலக்குடி ஆற்றின் உற்பத்தி, வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளிட்ட தேக்கு மரத்தின் இயற்கை சூழலை பார்க்கலாம்.
பரம்பிக்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். காடுகளில் இருந்து தேன் மற்றும் மூங்கில் அரிசி சேகரித்து, அணைகளில் மீன்பிடித்தல், கைவினைப்பொருட்கள் செய்தல், காகித பைகள் தயாரித்தல், சோப்பு தயாரித்தல் போன்றவற்றின் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை சம்பாதிக்கிறார்கள். இங்கு பழங்குடியின மலைவாழ் மக்களால் கேன்டீன்கள் நடத்தப்படுகின்றன.
சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து விதமான உணவுகளையும் தயாரித்து வழங்கி, அவர்களின் பாராட்டைப் பெறுகின்றனர். அணைப்பாடியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு கேரள வனத்துறையின் குடிசைகள், தங்கும் விடுதிகள், பங்களாக்கள் உள்ளன. ஆனப்பாடியில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கட்டு பகுதிக்கு செல்லும் வனப்பாதையில் இருபுறமும் காட்டு யானைகள், கரடிகள், காட்டு மாடுகள், புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள், மயில்கள், முயல்கள், கலைமான்கள், குள்ளநரிகள் போன்றவற்றை காணலாம். பரம்பிக்குளம் அணையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் மூங்கில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.