ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தலமாகும். 4 புறமும் மலைகளால் சூழப்பட்ட இந்த மலை 14 கிராமங்களை உள்ளடக்கிய தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இங்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். விவசாயம், வனப் பொருட்கள் சேகரிப்பு, சுயதொழில், வியாபாரம் போன்றவற்றை வாழ்வாதாரமாக செய்து வருகின்றனர்.
மேலும், ஏலகிரி மலையில் ஆண்டுக்கு எந்த நேரத்திலும் ஒரே சீரான வெப்பநிலை நிலவுவதால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த சுற்றுலா தலத்தில் 14 கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் மலை உச்சியில் இருந்து பூமியை பார்க்கும் வகையில் காட்சி முனையும் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் நின்று செல்பி எடுக்கின்றனர்.
மேலும், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அரங்குகளில் குடும்பத்துடன் அமர்ந்து மகிழ்கின்றனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏலகிரி மலை சுற்றுலா தலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து பல்வேறு இடங்களை கண்டு மகிழ்கின்றனர். மேலும், இங்குள்ள பல்வேறு பொழுதுபோக்கு அரங்குகளில் குழந்தைகள் விளையாடி, படகு தொழிலில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இங்கு விற்பனையாகும் பல்வேறு வகையான பழங்கள், சாக்லேட்கள், கைவினைப்பொருட்கள் போன்றவற்றை வாங்கி, ஏலகிரி சுற்றுலா தலத்திற்கு வருகை தந்ததன் அடையாளமாக இங்கிருந்து பல்வேறு நினைவுப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பள்ளி காலாண்டு விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்ததால் வழக்கமான கூட்டம் குறைந்தது.