ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் எமரால்டு சாலையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் கேய்ர்ன்ஹில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி நீலகிரி வன கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள விளக்க மையத்தில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீலகிரி மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்த சோலைக் காடுகள், புல்வெளிகள், மலைத்தொடர்கள் கலைநயமிக்கதாகவும் யதார்த்தமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வனப் பகுதியின் மாதிரி மற்றும் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, சிறுத்தை, நீலகிரி கருமந்தி ஆகியவற்றின் படங்கள் பாறை சரிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களின் வரலாறு குறித்த புகைப்படங்களும், நவீன நீலகிரி உருவான வரலாறு குறித்த தகவல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த காட்டின் நடுவில் நடைபாதையும் உள்ளது. இளஞ்சிவப்பு மல்லிகைப்பூக்கள் பூக்க ஆரம்பித்துள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அவற்றை கண்டு மகிழ்கின்றனர்.