சென்னை: பார்க்கிங் வசதி இல்லாத ஓட்டல்களை போக்குவரத்து போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அதன்படி, 80 ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லை என தெரியவந்துள்ளது. சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது.

மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதால் சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகளிலும் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், சாலையோரம் அமைந்துள்ள பல ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த ஓட்டல்களுக்கு வருபவர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதும் நெரிசலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து வாகன நிறுத்த வசதி இல்லாத முக்கிய ஓட்டல்களை போக்குவரத்து போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அதன்படி சென்னையில் உள்ள 80 பிரபல ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த ஓட்டல்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.