கோவையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சுமார் 2,500 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான பாதுகாப்பு பணிகளில் 2,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிலை கரைப்பு ஊர்வலங்களை முன்னிட்டு ஆகஸ்ட் 29 மற்றும் 31 ஆம் தேதிகளில் நகரில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 29 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படும். அதேநேரம் போத்தனூர் பகுதியில் தொடங்கும் ஊர்வலமும் குறிச்சி குளம் வரை நடைபெறும். இந்த பாதைகளில் வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் நகருக்குள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, மதுக்கரை, பாலக்காடு, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் மற்றும் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதைகள் வழியாக செலுத்தப்பட வேண்டும். இலகுரக வாகனங்களுக்கு தனித்தனி வழிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு நோக்கி செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 31 ஆம் தேதி சுண்டப்பாளையம் ரோடு முத்தண்ணன் குளத்தில் சிலைகள் கரைக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அந்த நாளும் நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்கம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தடை செய்யப்படும். உக்கடம், பேரூர், திருச்சி சாலை, தடாகம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய மார்க்கங்களில் மாற்றுப்பாதைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஊர்வலப்பாதைகள் முழுவதும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.