சென்னை: 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை நிறுவப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்திய விமானப்படையில் 1.70 லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.
நமது விமானப்படையில் 1,130 போர் விமானங்களும் 1,700 பிற பயன்பாட்டு விமானங்களும் உள்ளன. விமானப்படையின் நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில், இந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் ‘ஏர் ஷோ’ என்ற பிரமாண்ட சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், விமானப்படை அதிகாரிகள், அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மேலும், மெரினா கடற்கரையில் சாகச நிகழ்ச்சியை இலவசமாக காண மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் இறுதிகட்ட விமான சாகச ஒத்திகை நடக்கிறது. சென்னையில் இன்று இறுதிகட்ட விமான சாகசப் பயிற்சி காரணமாக 46-விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மெரினாவில் விமான சாகச ஒத்திகை காரணமாக கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல். அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
வான்வழி வித்தையை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.