குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் மலை ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குன்னூர் – உதகை இடையே வழக்கம் போல் மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால், நேற்று இரவு பெய்த கனமழையால் மலை ரயில் பாதையில் 3 இடங்களில் பாறைகள் விழுந்ததால் குன்னூரில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டு குன்னூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பாறைகளை அகற்றி சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிந்ததும் மலை ரயில் வழக்கம் போல் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.