மதுரை: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க தடையில்லா சான்றிதழ் கோரி திருநங்கை ஒருவர் தொடர்ந்த வழக்கில் வணிக வரித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். நான் ஒரு திருநங்கை. பல்வேறு சிரமங்களைத் தாண்டி, நான் பி.ஏ. முடித்தேன். 2019-ல் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.
பிஎஸ்டிஎம் (தமிழ் வழிக் கல்வி) சலுகையின் அடிப்படையில் பணி ஒதுக்கீடு பெற்ற பிறகு, வணிக வரித் துறையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்தேன். இந்த சூழ்நிலையில், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட எனது பிஎஸ்டிஎம் சான்றிதழ் செல்லாது என்று 2024-ல் உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதுரை ஊழல் தடுப்புத் துறை போலீசார் என் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் காரணமாக, நான் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். இந்த சூழ்நிலையில், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். எனக்கு ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்க வணிக வரித் துறையிடம் விண்ணப்பித்தேன். ஆனால் அவர்கள் ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். எனவே, குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் எனக்கு ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்க வணிக வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், மனுவுக்கு பதிலளிக்க வணிக வரித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.