சென்னை: சென்னையில் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையில் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 625 புதிய மின்சார பேருந்துகளை வாங்க சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சென்னையில் போக்குவரத்து வசதிகள் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னைக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதி கருதி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், ஏசி மற்றும் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்து இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முயற்சிகள், 2023-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.இதற்காக, இந்த ஆண்டு இறுதிக்குள், 625 புதிய மின்சார இரட்டை அடுக்கு பஸ்களை வாங்க, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அதற்கான ஒப்புதலைப் பெற, தமிழக அரசுக்கு, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரை அனுப்பியுள்ளது. இந்தப் பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பிறகு பேருந்துகளை இயக்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.