சென்னை: சி.எஸ்.கே. – மும்பை ஆட்டம்: ஸ்பான்சர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தை காண வருபவர்கள் ஸ்பான்சர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 23-ம் தேதி நடைபெற உள்ள “ஐ.பி.எல். 2025” கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் டிக்கெட்டுகளில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரெயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரெயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் (நடைமேடைகள் 1 & 2) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.