சென்னை: மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகளை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் கழகம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. மதுரை திட்ட அறிக்கை பக்கம் 936 மற்றும் கோயம்புத்தூர் திட்ட அறிக்கை பக்கம் 655 இல் உள்ளது. இதில் ரயில் நிலைய வகைகள், செலவுகள், செயல்படுத்தும் முறைகள் மற்றும் நிலைய இருப்பிடங்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.
மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடைக்கு 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 27 கி.மீ. உயர்த்தப்பட்ட சாலையில் 23 மெட்ரோ நிலையங்கள் மற்றும் 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. கோவையில் 39 கி.மீ. சத்தியமங்கலம் சாலையில் அவினாசி ரோட்டில் இருந்து கருமத்தம்பட்டி வரையும், உக்கடத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரையும் உயர்த்தப்பட்ட பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளன.
இதனிடையே, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க விருப்பம் தெரிவித்துள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள், சமீபத்தில் மதுரை, கோவைக்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடங்களை காட்டி விவரித்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறியதாவது:சென்னையை தொடர்ந்து மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை செயல்படுத்த மாநில அரசு மூலம் விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும், இரண்டு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை படிப்படியாக தொடங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.