பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி தற்போது பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ போர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்பட்டதால், இந்தியர்கள் துருக்கியை புறக்கணிக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக, துருக்கி சென்ற இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 36% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் 38,307 பேர் சென்ற நிலையில், இந்த ஆண்டு 24,250 பேர் மட்டுமே சென்றுள்ளனர்.

மேலும் ஜனவரி-ஜூன் மாத அளவில் இந்தியர்களின் வருகை 15% குறைந்துள்ளதாக துருக்கி சுற்றுலா அமைச்சகம் தரவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 41,544 பேர் சென்ற நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில் 31,659 பேர் மட்டுமே சென்றுள்ளனர். விமான சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளதால், துருக்கிக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறையும் அபாயம் உள்ளது.
இந்த புறக்கணிப்பு துருக்கியின் சுற்றுலா வருமானத்தையும் பொருளாதாரத்தையும் மோசமாக பாதித்து வருகிறது. துருக்கி ஏர்லைன்ஸ் விமான சேவைகள் அதிகரிக்க முயன்றும், இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இது துருக்கியின் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் நிலையில் இருக்கிறது.