உடுமலை: திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ள நீர், அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இது தவிர தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் அதன் வழியாக பாயும் பஞ்சலிங்க நீர்வீழ்ச்சிக்கு இது பிரபலமானது.
கடந்த சில மாதங்களாக பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த மழையால் பஞ்சலிங்க அருவியில் மதியம் 2 மணியளவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியின் உயரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி வெள்ளம் தாழ்வான பகுதியை நோக்கி பாய்ந்தது. அணை வழியாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மரம், செடி, கொடிகள், கற்களை சுமந்து கொண்டு திருமூர்த்தி அணையை வந்தடைந்தது.
ஆற்றின் நடுவே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளம் வருவதை உணர்ந்த கோவில் ஊழியர்கள், கோவில் உண்டியல்களை பாலிதீன் கவர்களால் மூடி வைத்தனர். அதனால் பக்தர்களின் காணிக்கை பாதுகாக்கப்பட்டது. கோவிலை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, கோவில் நடை அடைக்கப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் சாலைகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டன. அதேபோல் அருவிக்கு செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கோவில் நிர்வாகிகள் கூறுகையில்,””அருவியில் எதிர்பாராத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,” என்றார்.