சென்னை: பல்கலை, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தேர்தல் நடைமுறைகள், ஓட்டுரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என, யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
யுஜிசி செயலாளர் மணீஷ் ஆர்.ஜோஷி இன்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “மாணவர்களின் வாக்குரிமை குறித்த கல்வி அறிவை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய கல்வி அமைச்சகத்திற்கும் இடையே கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது, நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் நடைமுறைகள், வாக்களிக்கும் உரிமையைப் பெறுவது தொடர்பான பாடத்திட்டத்தை உள்ளடக்கியது.
மேலும், இது தொடர்பான விவாதங்கள், போட்டிகள், பயிலரங்குகள் போன்றவற்றை அவ்வப்போது நடத்தி, அனைத்து மாணவர்களும் வாக்களிக்கும் உரிமை குறித்த முழுமையான கல்வி அறிவைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சாராம்சம் குறித்த விவரங்களும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.