நீலகிரி: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 28 பயணிகள் மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது நீலகிரியில் தொடங்கப்பட்ட மலை ரயில் சேவை நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அந்தஸ்து, ஆசியாவின் மிக நீண்ட பல் சக்கர தண்டவாள அமைப்பும் உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
அடர்ந்த வனப்பகுதியின் ஊடாக குகைகள், பாலங்கள் அமைத்து நிறுவப்பட்ட தண்டவாளத்தில் எக்ஸ் கிளாஸ் எனப்படும் நீராவி என்ஜின் மூலம் மலை ரயிலை இயக்கி வருகின்றனர். மலை ரயில் பயணித்தில் அலாதி பிரியம் கொண்ட பயணிகள் சிலர் மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 28 பயணிகள் மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள், ” நூறு ஆண்டுகளாக குன்னூர் – ஊட்டி இடையே எக்ஸ் கிளாஸ் நீராவி இன்ஜின்கள் இயக்கப்பட்டன. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நீராவி என்ஜின்கள் ஊட்டி – குன்னூர் இடையே நிறுத்தப்பட்டு, டீசல் என்ஜின்களே பயன்படுத்தப்படுகிறது.
நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் எக்ஸ் கிளாஸ் நீராவி என்ஜின் ரயிலை 2 லட்சத்து 81 ஆயிரத்து 400 ரூபாய் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்த இங்கிலாந்து பயணிகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு பயணம் மேற்கொண்டனர். 2019 – ல் இதே போல வெளிநாட்டு பயணிகள் நீராவி என்ஜினை வாடைக்கு எடுத்தனர். பல வருடங்களுக்கு பிறகு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு எக்ஸ் கிளாஸ் நீராவி என்ஜின் இயக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது” என்றனர்.