சென்னை: ஜாதி, மதம், பிராந்திய அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த திமுக செயல்பட்டதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு பாஜகவின் சிந்தனையாளர்கள் பிரிவு சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சியில் மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். அப்போது அவர், “மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்துகிறது.
உண்மையில், திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தற்போது தமிழகத்துக்கு பல மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டை எதிர்க்கும் தகுதி திமுகவுக்கு இல்லை. ஆழ்கடல் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும். 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மனதில் வைத்து ஒட்டுமொத்த பட்ஜெட் மிகவும் சிறப்பாக உள்ளது.
ஸ்டார்ட்அப்கள், வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏஞ்சல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. விண்வெளித் துறை இப்போது பொது-தனியார் கூட்டாண்மைக்கு திறக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் ஐந்து மடங்கு வளர்ச்சி அடையும். பட்ஜெட்டில் தமிழகத்துக்கு உரிய பங்கு கிடைத்து வருகிறது. ஆனால் மாநில அரசு பொறுப்பற்றது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசு பயன்படுத்த முடியவில்லை. பரந்து விரிந்த கடற்கரையும், சிறந்த கடல் வளமும் கொண்ட தமிழகத்தில், ஆழ்கடல் முயற்சியின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை.
பாஜக ஆட்சியில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் திமுக இருந்தபோது ரயில்வே துறைக்கு ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இப்போது பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துள்ள நிலையில் ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள்? தமிழகத்திற்கு 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கிடைத்துள்ளன. மேலும், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 77 ரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த திட்டங்கள் அனைத்தும் பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் பற்று உள்ளது என்பதை காட்டுகிறது. பகுதி, மதம், ஜாதி அடிப்படையில் மக்களிடையே பிளவை உருவாக்கி தி.மு.க. அனைத்து தரப்பு மக்களுக்கும் பட்ஜெட்டில் இடம் இருப்பதை காங்கிரஸால் கூட விமர்சிக்க முடியாது.