தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் முழு விவரங்கள் பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களே இந்த தகவலை பதிவேற்றம் செய்கிறார்கள். எமிஸ் பதிவு பணி கூடுதல் பணிச்சுமை என்றும், இதனால் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் பலமுறை தெரிவித்து வருவதால், பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து சில செயல்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையின்படி, எமிஸ் பதிவு மேற்கொள்வதில் இருந்து ஆசிரியர்களுக்கு கூடுதல் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி இறுதிக்குள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பே நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அடல் ஆய்வகத் தொகுதி பதிவு எமிஸ் தளத்தில் இருந்து நீக்கப்படும். நிதி, நன்கொடைகள், தகவல் தொடர்பு, மனுக்கள், நடைமுறைகள், மானியங்கள், மாணவர் ஊக்கத்தொகை, ஆசிரியர் நேர அட்டவணைகள், மாதாந்திர அறிக்கைகள் மற்றும் மின் கட்டணம் தொடர்பான பதிவுகளும் நீக்கப்படும். மேலும், ஆசிரியர் தொழில் மேம்பாடு, வாசிப்பு இயக்கம், கலைவிழா, இலவசப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட சில விவரங்களைப் பதிவு செய்யும் பணியும் சற்று குறைந்துள்ளது.
இது தவிர பள்ளிகளில் செயல்படும் அனைத்து மன்றங்களின் விவரங்களையும் தனித்தனியாக பதிவிட தேவையில்லை. இவை அனைத்தும் ‘ஹவுஸ் சிஸ்டம்’ பிரிவின் கீழ் கொண்டு வரப்படும். இடைநிற்றல்களைப் பொறுத்த வரையில், 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தால் போதும். இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும். இதனால் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணிச்சுமை வெகுவாக குறைந்துள்ளது. இது அவர்களுக்கு கற்பிப்பதில் கவனம் செலுத்த உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.