சென்னை: சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு மருத்துவமனை மற்றும் மனநல ஆராய்ச்சி நிறுவனம் மாநில அளவிலான முதன்மை மனநல மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்டு, 800 படுக்கைகள் கொண்ட தன்னாட்சி மையமாக, ரூ. 120 கோடி நிதி வழங்கப்படும்.
மேல்நிலை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோயை கண்டறியும் நவீன மருத்துவ உபகரணங்களை வழங்க ரூ. 110 கோடி ஒதுக்கப்படும். தமிழகத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கும், நோயை முற்றிலுமாக அகற்றுவதற்கும், 14 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் கட்டம் கட்டமாக HPV (Human Papilloma Virus) தடுப்பூசி போடுவதற்கு ரூ. 36 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பட்ஜெட்டில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்களைக் கண்டறியும் பரிசோதனைகள் நடத்தவும், வாழ்க்கை முறை மாற்றம் குறித்து ஆலோசனை வழங்கவும் 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொற்றாத நோய்களின் தாக்கத்தை எதிர்த்துப் போராட, மக்கள் சுகாதார முன்முயற்சி (PHEIC) 2.20 கோடி மக்களைச் சென்றடைந்துள்ளது மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை உள்ளிட்ட சேவைகளை வழங்கியுள்ளது. ‘இன்னுயிர் காப்போம் திட்டம் – நம்மை காக்கும் 48’ திட்டத்தின் மூலம் 3,43,156 பேருக்கு ரூ. 302 கோடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக ரூ. 2,754 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலெஷ்மி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ. 1,092 கோடி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 1,461 கோடி, மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கு 348 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தமிழக பட்ஜெட்டில் மொத்தம் சுகாதாரத் துறைக்கு ரூ. 21,906 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவவறு அதில் கூறப்பட்டுள்ளது.