சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எல். ரவி, காஞ்சீபுரம் தேவராஜசுவாமி கோவிலின் பிரசாத கடை ஏலம் எடுக்க விரும்பினார். முன்னதாக, ஏலத்தில் பங்கேற்பதற்கு வைணவ பிராமணராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால் சமீபத்தில் அந்த நிபந்தனை காரணம் கூறாமல் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏல அறிவிப்பை ரத்து செய்யவும், ஏலத்தை நிறுத்தவும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையில், அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், ஒரே பிரிவினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல என்று வாதிட்டார். வைணவ கோவில்களில் பிரசாத கடை நடத்தி ஐந்து ஆண்டுகள் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “வைணவம் என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவு; அது தனிப்பட்ட சாதி அல்ல” என்று கூறினார். அதனால், நிபந்தனை நீக்கம் விதிமீறல் அல்ல என்று தீர்ப்பளித்தார். இதனால், எல். ரவியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.