செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள வெடால் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் தனது நிலத்தை பாகப்பிரிவினை செய்ய மனு அளித்தார். இதனை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் ராமன், ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டதாக கூறப்படுகிறது. தமிழரசன் உடனே முழுத் தொகையை தர முடியாது என்று தெரிவித்தபோது, அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை முதலில் கொடுத்தார். ஆனால், மீதமுள்ள ரூ.15 ஆயிரத்தையும் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ராமன்.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழரசன், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். போலீசார் திட்டமிட்டபடி ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுக்கச் செய்தனர். அதை ராமன் பெற்றுக்கொண்டதும், மறைந்து காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் நிலம் தொடர்பான பணிகளை முடிக்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பது வழக்கமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், அரசு ஊழியர்கள் சட்டப்படி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
லஞ்சம் வாங்கியதும் தவறு, கொடுத்ததும் தவறு என்றாலும், அதிகாரிகள் அடிக்கடி லஞ்சம் வாங்கி சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கைது செய்யப்பட்ட விஏஓ ராமனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.