சென்னை: கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகர் வேடன் சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும், வலை ஊடகங்களிலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். இவரது பாடல்கள், குறிப்பாக அரசியல் மற்றும் சமூக விமர்சனத்தோடு கூடிய வரிகள், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் பாடல்கள் ரீல்ஸிலும், ஸ்டோரீஸிலும் பரவி, இவரை குறுகிய காலத்திலேயே பிரபலப்படுத்தியுள்ளன.
வேடன் என்ற மேடைப்பெயரால் அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, திருச்சூரைச் சேர்ந்தவர். 2020ஆம் ஆண்டு ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற ஆல்பம் மூலம் தனது இசைப் பயணத்தை தொடங்கிய இவர், சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிரான தனது பாடல்களால் கவனத்தை பெற்றார். ‘நாயாட்டு’, ‘நோ வே அவுட்’, ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ ஆகிய படங்களிலும் இவர் பாடல்கள் எழுதி பாடியுள்ளார். இசை உலகில் மட்டுமல்லாமல் சர்ச்சைகளிலும் இவர் பங்கேற்று உள்ளார். கடந்த 2021ல் ‘மீ டூ’ புகார், சமீபத்தில் கஞ்சா வைத்திருந்தது மற்றும் சட்டவிரோதமாக வனவிலங்கு பாகங்களை அணிந்தது ஆகிய காரணங்களால் அவர் கைது செய்யப்பட்டும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுடன் வேடனின் வீடியோ அழைப்பு உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், திருமாவளவன் நேரில் நலம் விசாரித்து, வேடனின் குடும்பம் பற்றியும் கேட்கிறார். திருச்சூரில் வசிக்கும் வேடன், “நீங்கள் கேரளா வரும்போது என் வீட்டுக்கு வரவேண்டும்” என்று அன்புடன் அழைக்கிறார். இந்த அழைப்பு நெகிழ்ச்சியையும் உருக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த உரையாடலில், 14ம் தேதி திருச்சியில் நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் பேரணிக்கு வருமாறு திருமாவளவன் அழைக்க, “வர முயற்சிப்பேன்” என பதிலளிக்கிறார் வேடன். திருமாவளவன், “35 ஆண்டுகளாக நாம் பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் ஒரு பாடலாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் அரசியல் ஒலிக்கும், உங்கள் வார்த்தைகள் தாக்கம் ஏற்படுத்தும்,” என்று பாராட்ட, “நான் பாட ஆரம்பிக்க தைரியம் வந்ததே உங்கள் பேச்சுகள் கேட்டபிறகுதான்” என்று வேடன் பெருமையாக கூறுகிறார்.
இந்த உரையாடல் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரவலை பெற்றுள்ளன. அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு இசையில் அசத்தும் வேடனுக்கும், சமத்துவ அரசியலுக்கு குரல் கொடுக்கும் திருமாவளவனுக்கும் இடையேயான இந்த நட்பு உரையாடல், இளைஞர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புது தலைமுறை அரசியல் மற்றும் கலாசார உரையாடலின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.