சென்னை: நடிகர் விஜய் மீது தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்ற 17 வயது சிறுமி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகி மன வேதனையால் தீக்குளித்து உயிரிழந்தார். தீக்காயங்களால் தவித்த அந்த சிறுமி விஜய்யின் தீவிர ரசிகை என்பதால், மருத்துவ உதவி தருமாறு விஜய்யிடம் வீடியோவழி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் விஜய் எந்த வித உதவியும் செய்யாமல் புறக்கணித்ததாக வீரலட்சுமி கூறியுள்ளார்.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியபோது, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் தங்கள் ஒருமாத சம்பளத்தை மருத்துவ செலவிற்காக வழங்கினர். அதேபோல், தமிழ்நாடு அரசு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவியும் செய்தது. ஆனால், சௌமியா நேரடியாக கோரிக்கை வைத்த நடிகர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வீரலட்சுமி குற்றம்சாட்டினார்.
மேலும், “சிறுமி அஜித் அல்லது விஜயகாந்திடம் கோரிக்கை வைத்திருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார்” எனவும் அவர் குறிப்பிட்டார். நடிகர் விஜய் அரசின் உதவியை ஏற்றுக்கொண்டு நன்றி சொல்ல வேண்டியிருந்தாலும், அவர் அவ்வாறு செய்யாமல் அரசை நையாண்டி செய்ததாகவும் வீரலட்சுமி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டின் பேரில், தமிழர் முன்னேற்றப்படை சார்பில் பனையூரில் உள்ள விஜய்யின் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக வீரலட்சுமி அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.