சென்னை: சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா, ஆஸ்ட்ரோசாட் உள்ளிட்ட விண்வெளி அறிவியல் ஆராய்ச்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக அருகில் உள்ள வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய வீனஸ் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து ரூ.1,236 கோடி ஒதுக்கீடு செய்ததையடுத்து இஸ்ரோ பணியை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வீனஸ் விண்கலம் வரும் 2028-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. வீனஸ் கிரகத்தை ஆராய வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்தின் மூலம் விண்கலம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த விண்கலம் மொத்தம் 19 அதிநவீன ஆராய்ச்சி கருவிகளை சுமந்து செல்லும். இதில் 16 கருவிகள் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட உள்ளன. மீதமுள்ள 3 சாதனங்கள் இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாடுகளின் பங்களிப்புடன் வடிவமைக்கப்பட உள்ளன.
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த பிறகு எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்கலம் மார்ச் 29, 2028 அன்று ஏவப்பட உள்ளது. இது சுமார் 112 நாட்கள் பயணத்திற்குப் பிறகு ஜூலை 19 அன்று வீனஸை அடையும்.
பின்னர் விண்கலம் வீனஸின் மேற்பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 500 கிமீ தொலைவிலும் அதிகபட்சமாக 60,000 கிமீ தொலைவிலும் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்து, அது வீனஸைச் சுற்றி வந்து அதன் வளிமண்டலம், மேற்பரப்பு மற்றும் பிற புவியியல் அம்சங்கள் பற்றிய தரவுகளை வழங்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.