
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புயலாக வலுப்பெறாமல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும், நாளை 7 மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்றும் நாளையும் (நவ. 29, 30) மிக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “மேகங்கள் புழக்கத்தைப் பார்க்கும்போது, நிலைமை மீண்டும் மோசமடைந்து வருவதாகத் தெரிகிறது.

காற்றின் வேகம் 30 நாட்ஸ் என்றளவை நெருங்குகிறது. பொதுவாக, காற்றின் வேகம் சுமார் 35 நாட்ஸாக இருந்தால், அது புயலாக அறிவிக்கப்பட்டு பெயர் சூட்டப்படும். காற்று மேலும் வலுவடைந்து 40 முதல் 45 நாட் வரை வலுப்பெறலாம். பிரச்சனை காற்றில் இல்லை. மழையில்தான் பிரச்சனை. கவனிக்க வேண்டிய அளவிற்கு மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ளன. புதிய மேகக் கூட்டங்கள் உருவாகும் போது, மதியம், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் மரக்காணம் கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் மிக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 30-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் சிறப்பு கவனம் தேவை” என்றார். “வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மணிக்கு 9 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தற்போது சென்னையில் இருந்து 400 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 360 கிமீ தொலைவிலும், நாகையில் இருந்து 310 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை ஒட்டி நாளை காலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 55 முதல் 65 கிமீ முதல் 75 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்” என்றார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.