சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய பா.ஜ., அரசு, புதிய தேசிய வேளாண் சந்தை கொள்கையை வரைவு அறிக்கையாக வெளியிட்டு, கருத்து கேட்கிறது. விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்தால் தூக்கி எறியப்பட்ட 3 விவசாய சட்டங்களை மீண்டும் அமல்படுத்தும் வகையில் மத்திய அரசின் புதிய தேசிய வேளாண் விற்பனை வரைவு அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 3 விவசாய சட்டங்களை விட மோசமானது என விவசாயிகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை, குறைந்தபட்ச கூலி உத்தரவாதம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மின்சார தனியார்மயமாக்கலைத் தடுத்தல், எல்ஏஆர்ஆர் 2013 சட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் போராட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் மோகாவில் ஜனவரி 9-ம் தேதி போராட்டம் நடத்த விவசாயிகள் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வரைவு அறிக்கையை பஞ்சாப் அரசு நிராகரித்தது போல் தமிழக அரசும் நிராகரிக்க வேண்டும் என்றார்.