நாகை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது இரண்டாவது வார பிரசாரத்தை நாகை மற்றும் திருவாரூரில் மேற்கொண்டார். சென்னையிலிருந்து திருச்சி வந்த அவர், சாலை மார்க்கமாக நாகை நோக்கிப் பயணிக்கையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புத்தூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சுகள் ஆற்றி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

விஜயின் பிரசாரத்துக்கு 20க்கும் மேற்பட்ட கடும் கட்டுப்பாடுகள் காவல்துறையால் விதிக்கப்பட்டிருந்தன. இதுபற்றி பேசும்போது, “மக்களை சந்திக்க நான் அனுமதி கேட்டால் தடை போடுகிறார்கள். இனி மக்களிடம் தான் அனுமதி கேட்பேன். தேர்தலில் மோதிப் பார்த்துக் கொள்ளலாம்” என அவர் சவால் விட்டார். மேலும், “கடந்த முறை ஸ்பீக்கர் வயரை அறுத்துவிட்டார்கள். ஆர்எஸ்எஸ் தலைவரோ பிரதமரோ வந்தால் இப்படிச் செய்வீர்களா?” என கடுமையாக விமர்சித்தார்.
நாகை மாவட்டத்தின் மீன்பிடி தொழிலை குறிக்கோளாகக் கொண்டு, “இந்த மாவட்டத்திற்கு திமுக ஏதேனும் செய்ததா? கடல் சார் கல்லூரி, துறைமுகம், தொழிற்சாலை எதுவும் வந்ததா?” என கேள்வி எழுப்பினார். அதேசமயம் வெளிநாட்டு பயணங்களால் முதலீட்டை திரட்டுவதாக கூறும் அரசை குறிவைத்து, “இது தமிழ்நாட்டுக்கா? இல்ல குடும்பத்துக்கா?” என கேள்வி எழுப்பினார்.
உணர்ச்சிகரமான தருணத்தில், நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணியின் ஆசிகளை குறிப்பிட்டு, “கடல்தாயின் மடியில் இருக்கும் நாகை மக்களுக்குச் சிறப்பு வணக்கம்” என உரையைத் தொடங்கினார். பெரம்பலூர் மக்களை சந்திக்க முடியாததற்கு மன்னிப்பு கோரியதும், தொண்டர்களிடமிருந்து வெற்றிவேலை ஏற்றுக்கொண்டதும், அவரது பிரசாரத்தை மேலும் வலுப்படுத்தியது.