2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பிரச்சாரத் திட்டத்தை உறுதிசெய்துள்ளார். மதுரையில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் கிடைத்த உற்சாகத்திற்குப் பிறகு, மாவட்ட ரீதியாக மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தொடங்கும் இந்த பயணம், டிசம்பர் 20ஆம் தேதி மதுரையில் நிறைவடைகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று விஜய் மூன்று மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

விஜய் தனது எக்ஸ்க்ளூசிவிட்டியை இழக்க விரும்பவில்லை என்பதே இந்த முடிவின் அடிப்படை காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர் மக்களிடம் நேரடியாக பேசும் தாக்கத்தை தேர்தல் காலத்தில் வைத்திருக்க வேண்டும் என கருதுகிறார். அதனால் ஒரே நாளில் மூன்று மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்திப்பதே சரியான வழி என்று விஜய் நம்புகிறார். இதன் மூலம் அவர் ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு அடுத்த வாரம் வரை அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் கருதுகிறார்.
தவெக கட்சியில் மக்களுக்கு பரிச்சயமான முகம் விஜய் மட்டும்தான். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார், அருண்ராஜ் போன்ற இரண்டாம் நிலை தலைவர்கள் மக்களிடம் அறிமுகம் இல்லாதவர்களாகவே உள்ளனர். இதனால் விஜய் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும் என்ற முடிவை கட்சி எடுத்துள்ளது. மேலும், மாவட்டச் செயலாளர்களை முன்னிலைப்படுத்தவும் இந்த சுற்றுப்பயணத்தில் அவர் திட்டமிட்டுள்ளார்.
மக்கள் பிரச்சனைகளை நேரடியாக மாவட்டச் செயலாளர்களிடம் எடுத்துச் சென்று போராடச் செய்வதே தவெக தலைமையின் நோக்கமாகும். இதன் மூலம் கட்சியின் அமைப்பு வலுப்படுத்தப்பட்டு, மக்களிடம் நெருக்கமான தொடர்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் சனிக்கிழமை சென்டிமென்ட் மற்றும் ஒரே நாளில் பல மாவட்ட சுற்றுப்பயணம் ஆகியவை அடுத்த தேர்தலுக்கான அவரது அரசியல் யுக்தியை வெளிப்படுத்துகின்றன.