சென்னை: தவெக தொடங்கிய பிறகு முதல் முறையாக இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிரார்த்தனைக்கு தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தவெக இதில் தலைவர் விஜய் கலந்து கொண்டு இப்தார் நோன்பை தொடங்கி வைத்தார். நாள் முழுவதும் உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்தார். முஸ்லீம்களைப் போலவே, குல்லா, வெள்ளை சட்டை மற்றும் தலையில் வேட்டி அணிந்திருந்தார். தொடர்ந்து, பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்வாகிகளும் பிரார்த்தனை செய்தனர்.

பின்னர், விஜய் முஸ்லிம்களுடன் இப்தார் விருந்து எடுத்துக் கொண்டார். இப்தார் உடைக்கும் நிகழ்ச்சிக்கு குல்லாவுடன் வந்த விஜய், “மனிதநேயம், சகோதரத்துவம் என்ற கொள்கையில் வாழும் நீங்கள், எனது அழைப்பை ஏற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி” என்றார். இப்தார் விருந்தில் நோன்பு கஞ்சியுடன் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, சமோசா, உலர் பழங்கள் 2,000 பேருக்கு வழங்கப்பட்டது.
ஏராளமானோர் சாலைகளில் திரண்டதால், ராயப்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழாவையொட்டி மைதானத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தபோதும் விஜய்யை பார்க்க திரண்டிருந்த மக்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. தடுப்புகளை தாண்டி மக்கள் உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.