தமிழக வெற்றிக் கழகத்தை தலைமையிலான நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தனது அரசியல் பயணத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளார். சேலத்தில் இன்று நடைபெறும் மாநில அளவிலான கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மூலம் இது ஆரம்பமாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 13,000க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது சாதாரண செயல் அல்ல. இது விஜயின் அரசியல் உறுதியையும், திட்டமிட்ட முயற்சியையும் வெளிக்காட்டுகிறது.

ஐந்து மண்டலங்கள், 120 மாவட்டங்கள், 12,500 கிளைகள் என தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் விஜயின் அடையாளத்தை கொண்டு செல்லும் திட்டத்துடன், அவரது கட்சி மேற்செல்கிறது. கடந்த நாட்களில் பரந்தூர், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் நேரில் கலந்துகொண்டு மக்கள் தொடர்பு வைத்த விஜய், வீட்டிலிருந்தே அரசியல் செய்கிறார் என்ற விமர்சனத்துக்கு வலுவான பதில் அளித்துள்ளார்.
மதுரையில் வரும் ஜூலை 25ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது மாநில மாநாடு, 20 லட்சம் மக்கள் பங்கேற்பதை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது, விஜயின் மக்கள்மத்தேயான செல்வாக்கை மிகப் பெரிய அளவில் உணர்த்தும் முயற்சி. இந்த மாநாட்டுக்குப் பிறகு மாவட்டம் மற்றும் கிளை அளவிலான கூட்டங்கள் தொடங்க உள்ளன. மாவட்டங்களுக்கு விஜயின் நம்பிக்கைக்குரிய ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று விழிப்புணர்வையும் கொள்கை விளக்கத்தையும் வழங்க உள்ளனர்.
2025 இறுதிக்குள் முழுப் பரப்புரை முடிக்க, 2026 ஜனவரி மாதத்தில் திரைப்படம் ரிலீஸுக்குப் பிறகு, பிப்ரவரியில் முழு அளவில் விஜயின் தமிழகம் சுற்றுப் பயணம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது அரசியல் பயணம் களத்தில் துவங்கி, மக்கள் மனதில் பதியக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.