தமிழக வெற்றிக் கழக கட்சி மாநாடு கடந்த 27ம் தேதி நடந்தது.இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தை பார்வையிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாவட்ட நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய விஜய், கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருவது குறித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் கண்ணியமான முறையில் பதிலளிக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை வழங்கினார்.
தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்கவும், ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிடவும் விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பூத் கமிட்டியில் பெண்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்றும், அதிகளவில் பெண் தொண்டர்களை வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கொடி ஏற்றுவதற்கும், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும் அனுமதி கிடைக்காவிட்டால், கட்சித் தலைமையிடம் தெரிவிக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி சாலி கிராமத்தில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக் வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை மற்றும் செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த செயல் திட்டங்கள் இன்று தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு, கவர்னர் நிலைப்பாடு உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டம் தோறும் அதிநவீன வசதிகளுடன் கூடிய காமராஜர் மாதிரி அரசுப் பள்ளி உருவாக்கப்படும் என்றும், மாநில சுயாட்சிக் கொள்கையின்படி கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் ஆண், பெண் இருபாலருக்கும் அனைத்து துறைகளிலும் சம உரிமை வழங்க வேண்டும், சட்டமன்ற, அமைச்சர்களுக்கு நடத்தை விதிமுறைகள் வகுக்கப்படும், தீண்டாமை குற்றம், தீண்டாமை கடைபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.